பண்டைக் காலத்தில் அன்பு மனம் கொண்ட ஒரு நல்ல மனிதர் வாழ்ந்தார். இந்த உலக பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஏராளமாக இருந்தன.
அவருக்கு சேவை செய்வதற்கு நிறைய அடிமைகள் இருந்தார்கள்.
தங்களுடைய எஜமானரைப் பற்றி அந்த அடிமைகள் மிகவும் பெருமையுடன் பேசிக் கொள்வார்கள்.
"சூரியனுக்குக் கீழே நம் எஜமானரைப் போல இன்னொரு எஜமானரைப் பார்க்க முடியாது. அவர் நமக்கு நன்கு உணவு அளிக்கிறார். நல்ல ஆடைகளை அளிக்கிறார். நம் சக்திக்கு ஏற்ற வண்ணம் வேலைகளைத் தருகிறார். அவரிடம் கெட்ட பழக்கங்கள் என்று எதுவுமே கிடையாது. யாரிடமும் ஒரு கடுமையான வார்த்தையைக் கூட பயன்படுத்த மாட்டார். மற்ற எஜமானவர்களைப் போன்றவர் அல்ல அவர். மற்ற எஜமானர்கள் தங்களின் அடிமைகளை, கால்நடைகளை விட கேவலமாக நடத்துவார்கள். நட்பு ரீதியான ஒரு வார்த்தையைக் கூட அவர்களைப் பார்த்து கூறமாட்டார்கள். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். நல்ல காரியங்களைச் செய்கிறார்.
எங்களிடம் அன்பாக பேசுகிறார். இதை விட சிறந்த வாழ்க்கையை நாங்கள் விரும்பவில்லை.''
இப்படித்தான் அந்த அடிமைகள் தங்களுடைய எஜமானரைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இதை சாத்தான் பார்த்தான்.
தங்களுடைய எஜமானருக்குக் கீழே அந்த அடிமைகள் இந்த அளவுக்கு பாசத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ்வதைப் பார்த்து அவன் விரக்தி அடைந்துவிட்டான். அதனால் அவர்களில் ஒருவனாக இருக்கும் அலெப் என்பவனை தன்னுடைய ஆளுமைக்குக் கீழே கொண்டு வந்தான். சாத்தான் அவனிடம் மற்ற அடிமைகளையும் தட்டியெழுப்பும்படி கட்டளையிட்டான்.
ஒருநாள் அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுடைய எஜமானின் நற்செயல்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த வேளையில் அலெப் தன் குரலை உயர்த்திக்கூறினான்:
"நம் எஜமானின் நற்குணங்களைப் பற்றி இவ்வளவு பேசுவது என்பதே முட்டாள்தனமானது.
சாத்தான் விரும்புவதை நீங்கள் செய்தால், சாத்தானும் உங்களின் மீது அன்புடன் இருப்பார். நாம் நம் எஜமானுக்கு நல்ல முறையில் சேவை செய்கிறோம்.
அனைத்து விஷயங்களிலும் அவரை நாம் சந்தோஷத்தை அனுபவிக்கச் செய்கிறோம். அவர் எதைப் பற்றி சிந்தித்தாலும், உடனடியாக அதை நாம் செய்கிறோம்.
அவரின் அனைத்து விருப்பங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்கிறோம்.
நம்மிடம் அவர் அன்புடன் அல்லாமல் பிறகு எப்படி இருப்பார்? அவரை நாம் சந்தோஷத்தில் திளைக்க வைப்பதற்குப் பதிலாக, நாம் அவருக்கு ஏதாவது கெடுதல் செய்தோம் என்றால், அப்போது என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்துபாருங்கள்.
மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் அவரும் நடப்பார். மற்ற எஜமானர்கள் எந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்வார்களோ, அதே போலத்தான் அவரும் தீய செயலுக்கு எதிராக தீய செயலைச் செய்வார்.''
அலெப் கூறியதை மற்ற அடிமைகள் மறுத்தார்கள். இறுதியில் அவனைப் பார்த்து சவால் விட்டார்கள்.
தங்களுடைய எஜமானைக் கோபப்பட வைக்கவேண்டுமென அலெப் முடிவு செய்தான். தோல்வியடையும் பட்சம், அவன் தன் விடுமுறை ஆடையை இழக்கவேண்டியதிருக்கும். அதே நேரத்தில்.... அவன் வெற்றி பெற்றுவிட்டால், மற்ற அடிமைகள் தங்களின் ஆடைகளை அவனுக்குத் தந்துவிட வேண்டும்.
எஜமானுக்கு எதிராக செயல்பட்ட அவனைக் காப்பாற்றுவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அவன் சங்கிலிகளால் கட்டப் பட்டாலோ அல்லது சிறையில் அடைக்கப்பட் டாலோ அவனை விடுவிப்பதற்கு உதவுவதாகவும் அறிவித்தார்கள்.
இப்படியொரு ஒப்பந்தம் போடப்பட்டு விட்ட பிறகு, மறுநாள் காலையில் தன் எஜமானைக் கோபப்பட வைப்பதற்கு அலெப் ஒப்புக் கொண்டான்.
அலெப் ஒரு இடையன்.
மதிப்புமிக்க, தரமான முறையில் கருத்தரிக் கப்பட்ட, அவனுடைய எஜமான் அன்பு செலுத்தக்கூடிய நிறைய ஆடுகளுக்கு அவன் பொறுப்பாள ராக இருந்தான். மறுநாள் காலையில் தன்னிட முள்ள விலைமதிப்பு கொண்ட ஆடுகளின் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக சில விருந்தாளிகளைப் பட்டிக்கு எஜமான் அழைத்து வந்தபோது, அலெப் கண்களைச் சிமிட்டியவாறு தன் நண்பர்களிடம் கூறினான்:
"பாருங்க..... இப்போது.... அவரை எந்த அளவிற்கு கோபப்பட வைக்கப் போகிறேன் என்பதை....''
மற்ற அடிமைகள் அனைவரும் வந்து கூடிநின்றார்கள். வெளிவாசலையும் வேலியையும் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் பணியாள் தன்னுடைய வேலையை எப்படிச் செய்கிறான் என்பதைப் பார்ப்பதற்காக சாத்தான் அருகிலிருந்த ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.
எஜமான் பட்டிக்குள் நடந்தவாறு தன் விருந்தாளிகளுக்கு ஆடுகளையும் அவற்றின் குட்டிகளை யும் காட்டினார்.
தொடர்ந்து தன்னுடைய சிறப்புத் தன்மை கொண்ட செம்மறி ஆட்டைக் காட்ட அவர் விரும்பினார்.
"அனைத்து செம்மறி ஆடுகளுமே மதிப்பு மிக்கவைதான்.''- அவர் கூறினார்:
"ஆனால், என்னிடம் ஒரு செம்மறி ஆடு இருக்கிறது. அதன் கொம்புகள் மிகவும் நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைந்து இருக்கும். விலை மதிப்புள்ளது அது. என் கண்களுக்கு முன்னால் உள்ள ஆப்பிள் கனியைப் போல அதை அதிக மதிப்பு கொண்டதாக நான் நினைக்கிறேன்.''
விருந்தாளிகளைப் பார்த்து பதைபதைப்பு அடைந்த ஆடுகள் பட்டிக்குள் நெருக்கமாக நகர்ந்து கொண்டிருந்தன.
அதனால், விருந்தாளிகளால் செம்மறி ஆட்டைச் சரியாக பார்க்க முடியவில்லை. அது நேராக நின்றபோது, எதிர்பாராமல் நடப்பதைப் போல, அலெப் ஆட்டுக் கூட்டத்தைக் கலைத்துவிட்டான். மீண்டும் அவை ஒன்றாகக் கலந்தன. விலை மதிப்பு கொண்ட செம்மறி ஆடு எது என்பதை அந்த விருந்தாளிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில்.... அதனால், எஜமானே களைத்துப் போய்விட்டார்.
"அலெப்.... அன்பு நண்பனே!'' - அவர் கூறினார்:
"தயவுசெய்து எனக்காக நம்முடைய அந்த சிறந்த செம்மறி ஆட்டைப் பிடி... மிகவும் நெருக்கமாக, கொம்புகள் ஒன்றோடொன்று பிணைந்திருக்குமே... அந்த ஆடு... அவனை மிகவும் கவனமாகப் பிடி... சிறிது நேரத்திற்கு அவனை அப்படியே பிடித்து கையிலேயே வைத்திரு....''
மிகவும் அரிது என்று கூறக்கூடிய வகையில் எஜமான் இதைக் கூறினார். ஆடுகளின் கூட்டத்திற் குள் வேகமாக ஒரு சிங்கத்தைப் போல நுழைந்து, அலெப் விலை மதிப்பு கொண்ட அந்த செம்மறி ஆட்டைப் பிடித்தான்.
அவன் அதன் ரோமத்தை இறுக பற்றியவாறு, ஒரு கையால் அதன் இடது பின்னங்காலைப் பிடித்தவாறு, தன் எஜமானின் கண்களுக்கு முன்னால் அதைத் தூக்கி, அசைத்தான். ஒரு காய்ந்த கிளையைக் கையில் வைத்திருப்பதைப் போல, அவன் அந்த காரியத்தைச் செய்தான். அவன் அந்த செம்மறி ஆட்டின் காலை ஒடித்துவிட்டான். அது தன் முழங்காலில் ரத்தம் வழிய கீழே விழுந்தது. தொடர்ந்து அவன் வலது பின்னங்காலைப் பிடித்தான். இடது பக்கமாக அதைத் திருப்ப, அது ஒடிந்து தொங்கியது.
விருந்தாளிகளும் மற்ற அடிமைகளும் ஆச்சரியத்தில் குழம்பிய நிலையில் இருந்தார்கள்.
மரத்தில் அமர்ந்திருந்த சாத்தான், மிகவும் புத்திசாலித்தனமாக அலெப் தன் காரியத்தை நிறைவேற்றிவிட்டான் என்பதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான்.
எஜமான் இடியைப் போல கறுத்துக் காணப் பட்டார். அவர் முகத்தைச் சுளித்து வைத்தவாறு, தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு ஒரு வார்த்தை கூட கூறாமல் இருந்தார்.
விருந்தாளிகளும் அடிமைகளும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ஏதோ சுமையை இறக்கி வைப்பதைப் போல, எஜமான் தன்னைக் குலுக்கிக் கொண்டார்.
தொடர்ந்து அவர் தன் தலையை உயர்த்தி, தன் கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, அதே நிலையில் சிறிது நேரம் நின்றிருந்தார்.
இப்போது அவருடைய முகத்திலிருந்த சுருக்கங்கள் மறைந்தன. அவர் கீழே குனிந்து புன்னகை தவழ, அலெப்பைப் பார்த்தார்.
"ஓ... அலெப்.... அலெப். உன் எஜமான் என்னைக் கோபப்பட வைக்கும்படி உனக்குக் கட்டளை பிறப்பித்திருந்தான். ஆனால், உன் எஜமானைவிட, என் எஜமான் பலம் வாய்ந்தவர். உன் மீது எனக்குக் கோபம் இல்லை. ஆனால், உன் எஜமானை நான் கோபப்பட வைப்பேன். நான் உன்னைத் தண்டித்து விடுவேனோ என்று நீ பயப்படுகிறாய். உன் விடுதலைக்காக நீ ஆசைப்படுகிறாய்.
இங்கே பார்... அலெப்...
உன்னை நான் தண்டிக்க மாட்டேன்.ஆனால், விடுதலையாக இருக்க வேண்டும் என்று நீ விரும்புவதைப் போலவே, இப்போது... என் விருந்தாளிகளுக்கு முன்னிலையில்... நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன். நீ எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறாயோ, அங்கு செல்.. உன் விடுமுறை ஆடையை உன்னுடனே எடுத்துச் செல்.....''
அந்த அன்புமயமான எஜமான் தன் விருந்தாளிகளுடன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். அதே நேரத்தில்.. பற்களைக் கடித்தவாறு சாத்தான் மரத்திலிருந்து கீழே விழுந்து மண்ணுக்குள் புதைந்து கொண்டான்.
===